Monday, March 8, 2010

கொலை செய்யப்பட்ட உடலில் கசிந்த அவளின் எழுத்துக்கள்

அசைவுகள் மறந்து
சவமெனக்கிடக்கிறேன்..........
எனைச் சுற்றி
அர்த்தமற்ற உரையாடலை
வெகு கவனமாக நிகழ்த்துகின்றன
என் எண்ணங்களும் ,அவளின் நினைவுகளும்
எரிச்சலான ரீங்காரத்தோடு
உடலின் குருதியை அனுமதியின்றி
உறிஞ்சியவைகளை இறக்கச் செய்கிறது
அறிமுகமற்ற ஓர் எழுத்து.
உடைந்த எலும்புகளை சரி செய்து
கதவு திறந்து
யாருமே அறியாத ஏதோ ஒன்றை அனுமதிக்கிறேன்.
எவ்வித பாவனையும்மற்று
எனைக் கடந்து சென்று
வியர்த்த என் உடலை
களைத்துப் போடுகிறது.
அச்சமயம்
மின் விளக்கை தேடும் பூச்சி ஒன்றை
வேடிக்கை பார்த்த நினைவுகளை
லாவகமாக விழுங்கியது
கொலையை நேரில் பார்த்த பல்லி
மின்சாரமற்ற மின்விசிறியைப் போலவே
அறையும் இருந்திட வாகனத்தின் விரும்பத்தகாத
ஒலி
கலைக்கப்பட்ட என் சவத்தை
எதிர்பாராது மீண்டும் கொலை செய்கிறது.
உரையாடலை முடித்துவிட்ட நினைவுகளைத்
திட்டியவாறே பிளந்த உடலுடன்
வாசல் செல்கிறேன் .
தொலைந்த என் பிரேதங்களை
சாலையில் கிடந்ததாக
கொடுத்துவிட்டுச் செல்கிறாள்
என்னால்
தற்கொலையை நிகழ்த்தியவள்.

No comments:

Post a Comment