எல்லோராலும்
ஊளைக் காதன் என்றழைக்கப்பட்ட நான்
வதைக்கும் வெய்யிலில்
யாவருடனும் பேச விருப்பமற்று
நெற்றியில் வழியும் சொற்களை
சுட்டு விரலால் வழித்து
என் காதுகளிலிருந்து நீக்கப்பட்ட
பஞ்சுகளில் தெளிக்கிறேன்.
எனை நோக்கிக் கேட்கப்பட்ட அத்தனை கேள்விகளும்
புழுவெனத் துடித்து மண்ணில் இறக்கின்றன.
கடவுளரின் எதிர்பாரா கேள்விகளை
எப்படி எதிர்கொள்வதென்பதையும்
சமயங்களில்
என்னுடைய கேள்விகளுக்கே
நான் எப்படி பதில் தருவதென்பதையும்
யோசிக்கையில்
வேறு வழியறியாது
அம்மரத்திற்கு பின்பு தான் ஒளிந்து கொள்கிறேன்.
என் கரு தாங்கிய அவளும்
நானும்
ஏற்கனவே மரணித்த புளிய மர முலைகளில் கசிந்த
ஓர் எழுத்து என்னுள் விழ
எனக்கான அத்தனை கேள்விகளும்
வியர்வையாய் வழிந்தோடுகின்றன
வெக்கையான இப்பகலுக்குள்.
வெயிலின் உக்கிரம் குறைந்த வேளையில்
தன் சுருட்டை முடிச் சிக்கல்களை
கை விரல்களால் எடுத்துக்கொண்டே
நடந்து வரும் காது கேளாக் கடவுளிடம்
எவ்வித பதில்களுமற்ற எனை
ஒரு அட்டைப் பெட்டியில் ஒப்படைக்க
கடவுளும் நானும்
மாறிமாறி சிரித்துக் கொள்கிறோம்.
சிரிப்பிற்குள் எங்கள் இருவருக்கும்
வளரத் தொடங்குகிறது
இலைகளற்ற...
நிழல்களற்ற...
பால் வாசமற்ற ...
நீண்ட காதுகள்.
No comments:
Post a Comment