வெகு சுவாரஸ்யமாகவே தூரங்கள் இருந்திட
புதிய முகங்களை சந்திக்க நேர்வதும்
எவ்வித காரனங்களுமற்று பார்வைகளின்
திசைகளை மாற்றிக்கொள்வதும்
சட்டெனவே முடிந்து விடுகிறது
நமக்குள்
நம் கண்களுக்குள்.
வழக்கம் போல இன்றும்
பேருந்து நிலையத்தில்
சட்டைகளை வியர்வையால் நனைத்து
விளையாடும் விளையாட்டை
மிக மலிவான விலையில் விற்று இறங்கிவிடுகிறான்
சாத்தான்.
பயணச் சீட்டின் தொகையே
விளையாட்டின் வரையறை செய்யப்பட்ட நேரமாகிட
விளையாட்டின் அற்ப்புதங்களில் பயணத்தின் எல்லைகள்
சமயங்களில்
மறக்கவும் நேர்ந்திடலாம்.
மிக நேர்த்தியான புன்னகையுடன்
எனது இருக்கையை பூர்த்தி செய்திட்ட அவன்
ஒரு வித சலிப்பான பாவனையுடன்
சுமைகள் பாவத்திற்கு உரியவை என்றவாறு
தனது தோல் பையை
எனது மடியில் இறக்கி வைக்கிறான் ...
இப்பொழுது
போட்டியில் தோற்றவர்கள் அடுத்தடுத்த நிறுத்தங்களில் இறங்கியும்
புதிதாக கலந்து கொள்பவர்கள் ஏறிய வண்ணமிருக்க
எனக்கும் அவனுக்குமான போட்டியில்
அவனது முகம் இயேசுவைப் போல மாறுகிறது.
வியர்வைகள் வெற்றி பெரும் தருணம்
எனது தேகமெங்கும் இயேசுவின் விரல்கள்
கொடியாய் படர்கிறது.
பேருந்தின் சக பயணியாக
இயேசுவின் விரல் படர்ந்த தேகத்துடன்
யாரேனும் இருந்திருந்தால்
அவர்களின் உடலில் நீலப் பூக்கள் மலர்ந்திருப்பதை
ஒருவேளை
உங்களாலும் பார்த்திருக்கக் கூடும்....
good one.
ReplyDelete