Wednesday, March 17, 2010

கனவுச் சாத்தானின் முத்தச் சிலுவை

அது
என் முதல் கனவாகத்தான் இருந்திருக்கும்
அதில்
நான் உங்கள் அரசின் பிரதிநிதியாகவும்
நீங்கள் அனைவரும் சிலுவைகளைச் சுமக்கும்
என் அடிமைகளாகவும் இருந்தீர்கள்.
உங்களுக்கான
சுதந்திரம் பற்றிய
காமம் பற்றிய
கற்பிதங்களை நானே உருவாக்கினேன்.

உங்களின் அதீத சகிப்புத் தன்மையாலும்
சிலுவைகளின் சுமைகள் பழக்கமாகிவிட்டதாலும்
எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லையென்றாலும்
சிறைச்சாலைகளற்ற அக்கனவில்
எனக்கு
அனைத்து விரல்களும் இல்லாமல் தான் இருந்தது.

மற்றொரு கனவில் நான்
என்னை வனமாக மாற்றியிருக்க
அங்கும் நீங்கள் என் சுதந்திர அடிமைகளாகவும்
ஆணிகளை வைத்து விளையாடியவண்ணமுமாய் இருந்தீர்கள்.
கனவிலிருந்து விழித்த உங்களது கண்கள்
எனக்குள் இருக்க
அடக்க முடியா முத்தமொன்றை சிலுவையாக்கி
வியர்வை வழிந்தோடும் என்னுள்
சுமந்து சென்றான் சாத்தான்.


வனப்பட்சிகளின் கலவுதனில் முயங்கிய விருட்சங்கள்
மூன்றாம் ஜாமக் கடுங்குளிருக்கு
தரையில் படர்ந்த கொடிகளை
போர்வையாய் மாற்றிக்கொள்ள
நானும்
அக்கனவின் விரல்களும் இறந்துகிடந்தோம்.


அது என் கடைசிக் கனவாகக் கூட இருக்கலாம்
அங்கு சாத்தானின் காமங் கொண்ட விரல்கள்
பித்தம் தலைக்கேறிய யுவதிகளின்
கூந்தல் சித்திரங்களுக்குள் நுழைய
சிலுவைகளை முத்தங்களால் நிரப்பிய யுவதிகள்
குலை ஒலிகளுக்குள் துயரத்தின் ஆணிகளை
மாலையாக அணிந்து மறைந்தனர்.

சித்திரங்களின் நிழல்களில்
ஆணிகள் ஆழமாய் ஊடுருவிய
விரல்களின் காமத்திற்கு பைத்தியம் பிடிக்க
முத்தங்களால் சாத்தானின் சுமை குறைத்த
நீங்கள் யாவரும் இப்பிரபஞ்சத்தின் தேவனாநீர்கள்


அப்போது நான்
உங்களுக்காக
உங்களின்
சுதந்திரத்தையும் ,காமத்தையும்
உங்களுக்கான
நுகர்பொருளாக்கி வைத்திருந்தேன்
என்
கனவின் கனவிற்குள் .......

No comments:

Post a Comment