நேற்றைய கனவு வனத்தின்
ஆதி ஒலிகளுக்குள்
வேட்கை மறந்த ஒற்றைப் பசியுடன் செல்கிறேன்
வேட்டைக்கு.
துயரம் சூழ் கனவுகளுடன்
முது கிழவன் வரைந்த பாறைச்சித்திரங்களில்
பட்சிகளும் ,விலங்குகளும் லிபிகளாய் மிதக்க
வேட்டைக்கான ஒவ்வொரு தாவலிலும்
கணங்கள் சிற்றோடையாய் கடக்கிறது
தாவர உடல்களுக்குள்.
எழுத்துக்கள்
வெய்யில் தாவரங்களின் வேர்களில்
புழுக்களாய் ஊர்ந்து செல்ல
எனது பசிக்கான ஓர் எழுத்தை தேர்வு செய்கிறேன்.
அது எனது ஒப்பனை முகத்தைத் தன்னில் பிரதிபலித்து
வல்லுராய் பறந்து செல்கிறது
சர்ப்பமாய் எனை மாற்றி.
வேட்டைக் கண்களை உடலெங்கும் தைத்து
வேறொரு எழுத்தின் கனவிற்குள் மறைந்து
வெளி எனக்களித்த பெயர்களை வேவு பார்த்துக்கொண்டிருக்க
ஒருமித்த வடிவங்களுடன் எனது பெயர்களில் ஒன்று
எனை ஊமையாக்கிச் செல்கிறது.
தப்பியோடும் எழுத்துக்களின் புழுதிக்கொம்புகளில்
அடிபட்டு நொறுங்கிக்கிடைக்கையில்
வான் பறவையின் நிழல்
எனதுடலில் யாருமறியா ஒலிகலற்றவனின் கனவுகளை
விதைத்துச் செல்கிறது.
எனதம்புகளை நோக்கி நகைத்திடும் மிருகங்கள்
எழுத்துக்களின் அர்த்தங்களை
வெப்பக்காற்றில் தூவிச் செல்ல
நிழல்களின் வடிவங்கள்
அழிவின் ஒப்பாரியைப் பாட ஆரம்பிக்கின்றன
வனமெங்கும்.
இயலாமையின் தருணங்களில் எழுத்துக்களற்ற
என் பெயரின் சாத்தியங்களைப் புணர்ந்த
அர்த்தமற்ற ஓரெழுத்து எனை வேட்டையாட
வரலாற்று எலும்புகள்
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன
லிபிகளற்ற மொழியின்
கடைசி ஆன்மாவை.
No comments:
Post a Comment