Friday, March 26, 2010

வில்லியம் பிளாக்கின் கணித நிர்வாணம்

பிரபஞ்சத்தின் இரவு தனிமையானது என்றான்
மது போதையில் ப்ளாக்

உன் இறந்த கால கண்ணாடியின்
புதை படிவங்களில் சிக்கிய என் ரேகைகளை
மீட்டுத் தர முடியுமா என்றேன்
அவனின் பச்சை இரவுக்குள் .

கணித இரவின் பாறைகள்
தாங்கள் சூடிய ஒப்பனைத் தாவரங்களை
சரிசெய்தவாரே
ஒரு மீயொலியைப் போல
எவ்வித பயமுமற்று
என்னிடம் சொன்னது
பிரபஞ்சத்தின் இரவு தனிமையானது என்று .


ஒப்பனை இரவின் லிபிகளில் கசிந்த குருதியை
ஆடையென உடுத்தி
நியூட்டனின் சுருள் முடிகள்
சர்ப்பமாய் மாறக் கூடும் என்ற
பாறைகளின் விழிப் பயத்தை
நான் களவாடும் தருணம்
அவனின் பரி நிர்வாணம்
என் கண்களைக் கூச வைக்கிறது .


அந்தக் கணிதவியல் அறிஞனின்
உடல் திரட்சியை குறிப்பெடுத்துக் கொண்ட
ஒரு வினோத ஜந்து
பாறை இடுக்குகளின் இரவிற்குள்
மெல்ல நகர்கிறது
எனது சுண்டு விரல் பிடித்து ...

நேற்றைய பொழுதின் பகலை இரண்டாய்க் கிழித்து
ஒன்றில் எனது நிர்வாணத்தையும்
மற்றொன்றில்
இப்பிரபஞ்ச தனிமையினை
முக்கோணமாய் வரைந்து நியூட்டன் இறந்து விட

வரப் போகும் பகலுக்கான
சித்திரக் குறிப்புகளைத் தொலைத்த
விலங்கின் கூர் நகங் கொண்ட
அவனின் பிரதி பிம்பம்

என்னைத் தலை கீழான மதுக் குடுவையெனவும்
இரவின் நிர்வாணத்தை அரை வட்டமாகவும் மாற்றியது
மிகவும் தற்காலிகமானது தான்

இன்றைய இரவின் தனிமையைப் போல ....

No comments:

Post a Comment