Friday, March 26, 2010

வில்லியம் பிளாக்கின் கணித நிர்வாணம்

பிரபஞ்சத்தின் இரவு தனிமையானது என்றான்
மது போதையில் ப்ளாக்

உன் இறந்த கால கண்ணாடியின்
புதை படிவங்களில் சிக்கிய என் ரேகைகளை
மீட்டுத் தர முடியுமா என்றேன்
அவனின் பச்சை இரவுக்குள் .

கணித இரவின் பாறைகள்
தாங்கள் சூடிய ஒப்பனைத் தாவரங்களை
சரிசெய்தவாரே
ஒரு மீயொலியைப் போல
எவ்வித பயமுமற்று
என்னிடம் சொன்னது
பிரபஞ்சத்தின் இரவு தனிமையானது என்று .


ஒப்பனை இரவின் லிபிகளில் கசிந்த குருதியை
ஆடையென உடுத்தி
நியூட்டனின் சுருள் முடிகள்
சர்ப்பமாய் மாறக் கூடும் என்ற
பாறைகளின் விழிப் பயத்தை
நான் களவாடும் தருணம்
அவனின் பரி நிர்வாணம்
என் கண்களைக் கூச வைக்கிறது .


அந்தக் கணிதவியல் அறிஞனின்
உடல் திரட்சியை குறிப்பெடுத்துக் கொண்ட
ஒரு வினோத ஜந்து
பாறை இடுக்குகளின் இரவிற்குள்
மெல்ல நகர்கிறது
எனது சுண்டு விரல் பிடித்து ...

நேற்றைய பொழுதின் பகலை இரண்டாய்க் கிழித்து
ஒன்றில் எனது நிர்வாணத்தையும்
மற்றொன்றில்
இப்பிரபஞ்ச தனிமையினை
முக்கோணமாய் வரைந்து நியூட்டன் இறந்து விட

வரப் போகும் பகலுக்கான
சித்திரக் குறிப்புகளைத் தொலைத்த
விலங்கின் கூர் நகங் கொண்ட
அவனின் பிரதி பிம்பம்

என்னைத் தலை கீழான மதுக் குடுவையெனவும்
இரவின் நிர்வாணத்தை அரை வட்டமாகவும் மாற்றியது
மிகவும் தற்காலிகமானது தான்

இன்றைய இரவின் தனிமையைப் போல ....

காம வனம்

எதிர்பாராமல் கிடைத்த முத்தமொன்றை
எனதான வனத்தின் கிழட்டு மரங்களுக்குள்
பதுக்கி வைக்க

தனிமையான வெளியொன்றில்
கவனமாக நிர்ணயிக்கப்படுகிறது
எங்களது புணர்வு .

தீர்மானிக்கப்பட்ட எல்லைகளுக்குள்
திளைத்திடும் நான்
காமத்தின் மெழுகில்
நீல நிற நெற்றிப்பொட்டாய் எரிகிறேன்.

ஏக்கத்தின் கண்ணீர்த்துளிகள்
ஒவ்வொன்றும்
பிரபஞ்சமாய் மிளிர்ந்திட
வனத்தின் இலைகள்
எதிர்பார்த்து கிடைக்காமல் போன
அவளின் மகரந்த முத்தங்களை
விவாதிக்கின்றன
தீவிரமாக ....

முத்தங்களை மண்புழுவாக்கி
அவளின் மேனியில் நகர்த்துகையில்
ரோமக்கால்கள் தோறும்
மறவாமல் தோன்றுகின்றன
காமத்தின் திரவங்கள் ...

விரல்களில் கசிந்திடும் காமம்
உடலில் அலையென ததும்பிட
மரத்தின் சிலிர்ப்புகளில்
பழுத்த இலைகள் பிரியும் ப்ரியமற்று
உதிர்கின்றன
எண்ணற்ற முத்தங்களை சுமந்து ....

முத்தங்கள் சுமையாகும் பட்சம்
வனத்தின் பாதைகள் தோறும்
நான் ..............அவளாக ;
அவள் ................................................
..............................................................
.........................................சர்ப்பமாக

Thursday, March 18, 2010

கதைபூமி

நாடகம் : கதை பூமி
இடம் : தேனி
இயக்கம் : பேய்க்காமன்
கதை : ச.முருக பூபதிWednesday, March 17, 2010

கனவுச் சாத்தானின் முத்தச் சிலுவை

அது
என் முதல் கனவாகத்தான் இருந்திருக்கும்
அதில்
நான் உங்கள் அரசின் பிரதிநிதியாகவும்
நீங்கள் அனைவரும் சிலுவைகளைச் சுமக்கும்
என் அடிமைகளாகவும் இருந்தீர்கள்.
உங்களுக்கான
சுதந்திரம் பற்றிய
காமம் பற்றிய
கற்பிதங்களை நானே உருவாக்கினேன்.

உங்களின் அதீத சகிப்புத் தன்மையாலும்
சிலுவைகளின் சுமைகள் பழக்கமாகிவிட்டதாலும்
எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லையென்றாலும்
சிறைச்சாலைகளற்ற அக்கனவில்
எனக்கு
அனைத்து விரல்களும் இல்லாமல் தான் இருந்தது.

மற்றொரு கனவில் நான்
என்னை வனமாக மாற்றியிருக்க
அங்கும் நீங்கள் என் சுதந்திர அடிமைகளாகவும்
ஆணிகளை வைத்து விளையாடியவண்ணமுமாய் இருந்தீர்கள்.
கனவிலிருந்து விழித்த உங்களது கண்கள்
எனக்குள் இருக்க
அடக்க முடியா முத்தமொன்றை சிலுவையாக்கி
வியர்வை வழிந்தோடும் என்னுள்
சுமந்து சென்றான் சாத்தான்.


வனப்பட்சிகளின் கலவுதனில் முயங்கிய விருட்சங்கள்
மூன்றாம் ஜாமக் கடுங்குளிருக்கு
தரையில் படர்ந்த கொடிகளை
போர்வையாய் மாற்றிக்கொள்ள
நானும்
அக்கனவின் விரல்களும் இறந்துகிடந்தோம்.


அது என் கடைசிக் கனவாகக் கூட இருக்கலாம்
அங்கு சாத்தானின் காமங் கொண்ட விரல்கள்
பித்தம் தலைக்கேறிய யுவதிகளின்
கூந்தல் சித்திரங்களுக்குள் நுழைய
சிலுவைகளை முத்தங்களால் நிரப்பிய யுவதிகள்
குலை ஒலிகளுக்குள் துயரத்தின் ஆணிகளை
மாலையாக அணிந்து மறைந்தனர்.

சித்திரங்களின் நிழல்களில்
ஆணிகள் ஆழமாய் ஊடுருவிய
விரல்களின் காமத்திற்கு பைத்தியம் பிடிக்க
முத்தங்களால் சாத்தானின் சுமை குறைத்த
நீங்கள் யாவரும் இப்பிரபஞ்சத்தின் தேவனாநீர்கள்


அப்போது நான்
உங்களுக்காக
உங்களின்
சுதந்திரத்தையும் ,காமத்தையும்
உங்களுக்கான
நுகர்பொருளாக்கி வைத்திருந்தேன்
என்
கனவின் கனவிற்குள் .......

Monday, March 8, 2010

சுருட்டை முடிக்காரனின் காதுகள்

எல்லோராலும்
ஊளைக் காதன் என்றழைக்கப்பட்ட நான்

வதைக்கும் வெய்யிலில்
யாவருடனும் பேச விருப்பமற்று
நெற்றியில் வழியும் சொற்களை
சுட்டு விரலால் வழித்து
என் காதுகளிலிருந்து நீக்கப்பட்ட
பஞ்சுகளில் தெளிக்கிறேன்.

எனை நோக்கிக் கேட்கப்பட்ட அத்தனை கேள்விகளும்
புழுவெனத் துடித்து மண்ணில் இறக்கின்றன.

கடவுளரின் எதிர்பாரா கேள்விகளை
எப்படி எதிர்கொள்வதென்பதையும்
சமயங்களில்
என்னுடைய கேள்விகளுக்கே
நான் எப்படி பதில் தருவதென்பதையும்
யோசிக்கையில்
வேறு வழியறியாது
அம்மரத்திற்கு பின்பு தான் ஒளிந்து கொள்கிறேன்.

என் கரு தாங்கிய அவளும்
நானும்
ஏற்கனவே மரணித்த புளிய மர முலைகளில் கசிந்த
ஓர் எழுத்து என்னுள் விழ
எனக்கான அத்தனை கேள்விகளும்
வியர்வையாய் வழிந்தோடுகின்றன
வெக்கையான இப்பகலுக்குள்.

வெயிலின் உக்கிரம் குறைந்த வேளையில்
தன் சுருட்டை முடிச் சிக்கல்களை
கை விரல்களால் எடுத்துக்கொண்டே
நடந்து வரும் காது கேளாக் கடவுளிடம்
எவ்வித பதில்களுமற்ற எனை
ஒரு அட்டைப் பெட்டியில் ஒப்படைக்க

கடவுளும் நானும்
மாறிமாறி சிரித்துக் கொள்கிறோம்.
சிரிப்பிற்குள் எங்கள் இருவருக்கும்
வளரத் தொடங்குகிறது

இலைகளற்ற...
நிழல்களற்ற...
பால் வாசமற்ற ...
நீண்ட காதுகள்.

கொலை செய்யப்பட்ட உடலில் கசிந்த அவளின் எழுத்துக்கள்

அசைவுகள் மறந்து
சவமெனக்கிடக்கிறேன்..........
எனைச் சுற்றி
அர்த்தமற்ற உரையாடலை
வெகு கவனமாக நிகழ்த்துகின்றன
என் எண்ணங்களும் ,அவளின் நினைவுகளும்
எரிச்சலான ரீங்காரத்தோடு
உடலின் குருதியை அனுமதியின்றி
உறிஞ்சியவைகளை இறக்கச் செய்கிறது
அறிமுகமற்ற ஓர் எழுத்து.
உடைந்த எலும்புகளை சரி செய்து
கதவு திறந்து
யாருமே அறியாத ஏதோ ஒன்றை அனுமதிக்கிறேன்.
எவ்வித பாவனையும்மற்று
எனைக் கடந்து சென்று
வியர்த்த என் உடலை
களைத்துப் போடுகிறது.
அச்சமயம்
மின் விளக்கை தேடும் பூச்சி ஒன்றை
வேடிக்கை பார்த்த நினைவுகளை
லாவகமாக விழுங்கியது
கொலையை நேரில் பார்த்த பல்லி
மின்சாரமற்ற மின்விசிறியைப் போலவே
அறையும் இருந்திட வாகனத்தின் விரும்பத்தகாத
ஒலி
கலைக்கப்பட்ட என் சவத்தை
எதிர்பாராது மீண்டும் கொலை செய்கிறது.
உரையாடலை முடித்துவிட்ட நினைவுகளைத்
திட்டியவாறே பிளந்த உடலுடன்
வாசல் செல்கிறேன் .
தொலைந்த என் பிரேதங்களை
சாலையில் கிடந்ததாக
கொடுத்துவிட்டுச் செல்கிறாள்
என்னால்
தற்கொலையை நிகழ்த்தியவள்.

காகங்களாக மாறிய அடிமைகளும் பூனைகளாக மாறிய குழந்தைகளும்

குழந்தைகளின் திசையறியா பாதங்களை
பின் தொடரும்
கருவுற்ற பூனை
தன் கூர் நகங்களை தவறாது
தெருவின் பூட்டிய வீடுகளின் முன்
தவற விட்டுச் செல்கிறது.
நிறமற்ற பூனைகளின்
துண்டிக்கப்பட்ட பிரேதங்கள்
இறந்த சுவர்களின் திசையெங்கும்
அலைந்து திரிகிறது.
பூட்டிய தாழ்ப்பாளின் எலும்புகளில்
நகர அடிமைகளின் தடயங்களை
உருவமற்ற நிழல்கள் பல
வேவு பார்ப்பது மிக இயல்பானதாகிட
பூனை வேட்டை பற்றிய கனவில்
விலா இளைக்க
படுத்துறங்கும் நாய்கள்
பாதசாரிகளின் கவனத்திற்கு அவசியமற்ற ஒன்றாகிறது.
பாதசாரிகளும் , நாய்களும்
ஒன்றா அல்லது வேறுவேறா என்ற
குழப்பங்களில் திரவமற்று ஆவியாகின்றன
பயம் கொண்ட பூனைகளின்
மச்சள் விழிகள் .....
பால் நிரம்பிய முலைகளின் கனவுகளில்
நீந்தித்திரியும் குழந்தைகளின் கொலுசு பாதங்கள்
காற்றில் தூவிச் செல்கிறது
பூனைகளின் பசி ஒலிகளை ...
யாருக்கும் தெரியாது ப்ராய்லர் கோழியின்
மஞ்சள் விரல்களை
வாயில் கவ்விய கருங்காக்கை ஒன்று
இப்பொழுது
அடுத்த தெருவின் மின் கம்பிக்கு
பறந்து செல்கிறது
எந்த அடிமைகளுக்கும் தெரியாமல் .....

Sunday, March 7, 2010

இயேசுவின் நீலப் பூக்கள்

வெகு சுவாரஸ்யமாகவே தூரங்கள் இருந்திட
புதிய முகங்களை சந்திக்க நேர்வதும்
எவ்வித காரனங்களுமற்று பார்வைகளின்
திசைகளை மாற்றிக்கொள்வதும்
சட்டெனவே முடிந்து விடுகிறது
நமக்குள்
நம் கண்களுக்குள்.
வழக்கம் போல இன்றும்
பேருந்து நிலையத்தில்
சட்டைகளை வியர்வையால் நனைத்து
விளையாடும் விளையாட்டை
மிக மலிவான விலையில் விற்று இறங்கிவிடுகிறான்
சாத்தான்.

பயணச் சீட்டின் தொகையே
விளையாட்டின் வரையறை செய்யப்பட்ட நேரமாகிட
விளையாட்டின் அற்ப்புதங்களில் பயணத்தின் எல்லைகள்
சமயங்களில்
மறக்கவும் நேர்ந்திடலாம்.
மிக நேர்த்தியான புன்னகையுடன்
எனது இருக்கையை பூர்த்தி செய்திட்ட அவன்
ஒரு வித சலிப்பான பாவனையுடன்
சுமைகள் பாவத்திற்கு உரியவை என்றவாறு
தனது தோல் பையை
எனது மடியில் இறக்கி வைக்கிறான் ...
இப்பொழுது
போட்டியில் தோற்றவர்கள் அடுத்தடுத்த நிறுத்தங்களில் இறங்கியும்
புதிதாக கலந்து கொள்பவர்கள் ஏறிய வண்ணமிருக்க
எனக்கும் அவனுக்குமான போட்டியில்
அவனது முகம் இயேசுவைப் போல மாறுகிறது.
வியர்வைகள் வெற்றி பெரும் தருணம்
எனது தேகமெங்கும் இயேசுவின் விரல்கள்
கொடியாய் படர்கிறது.
பேருந்தின் சக பயணியாக
இயேசுவின் விரல் படர்ந்த தேகத்துடன்
யாரேனும் இருந்திருந்தால்
அவர்களின் உடலில் நீலப் பூக்கள் மலர்ந்திருப்பதை
ஒருவேளை
உங்களாலும் பார்த்திருக்கக் கூடும்....

Thursday, March 4, 2010

வன எலும்புகளின் கடைசி லிபி

நேற்றைய கனவு வனத்தின்
ஆதி ஒலிகளுக்குள்
வேட்கை மறந்த ஒற்றைப் பசியுடன் செல்கிறேன்
வேட்டைக்கு.
துயரம் சூழ் கனவுகளுடன்
முது கிழவன் வரைந்த பாறைச்சித்திரங்களில்
பட்சிகளும் ,விலங்குகளும் லிபிகளாய் மிதக்க
வேட்டைக்கான ஒவ்வொரு தாவலிலும்
கணங்கள் சிற்றோடையாய் கடக்கிறது
தாவர உடல்களுக்குள்.
எழுத்துக்கள்
வெய்யில் தாவரங்களின் வேர்களில்
புழுக்களாய் ஊர்ந்து செல்ல
எனது பசிக்கான ஓர் எழுத்தை தேர்வு செய்கிறேன்.
அது எனது ஒப்பனை முகத்தைத் தன்னில் பிரதிபலித்து
வல்லுராய் பறந்து செல்கிறது
சர்ப்பமாய் எனை மாற்றி.
வேட்டைக் கண்களை உடலெங்கும் தைத்து
வேறொரு எழுத்தின் கனவிற்குள் மறைந்து
வெளி எனக்களித்த பெயர்களை வேவு பார்த்துக்கொண்டிருக்க
ஒருமித்த வடிவங்களுடன் எனது பெயர்களில் ஒன்று
எனை ஊமையாக்கிச் செல்கிறது.
தப்பியோடும் எழுத்துக்களின் புழுதிக்கொம்புகளில்
அடிபட்டு நொறுங்கிக்கிடைக்கையில்
வான் பறவையின் நிழல்
எனதுடலில் யாருமறியா ஒலிகலற்றவனின் கனவுகளை
விதைத்துச் செல்கிறது.
எனதம்புகளை நோக்கி நகைத்திடும் மிருகங்கள்
எழுத்துக்களின் அர்த்தங்களை
வெப்பக்காற்றில் தூவிச் செல்ல
நிழல்களின் வடிவங்கள்
அழிவின் ஒப்பாரியைப் பாட ஆரம்பிக்கின்றன
வனமெங்கும்.
இயலாமையின் தருணங்களில் எழுத்துக்களற்ற
என் பெயரின் சாத்தியங்களைப் புணர்ந்த
அர்த்தமற்ற ஓரெழுத்து எனை வேட்டையாட
வரலாற்று எலும்புகள்
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன
லிபிகளற்ற மொழியின்
கடைசி ஆன்மாவை.