Monday, March 8, 2010

காகங்களாக மாறிய அடிமைகளும் பூனைகளாக மாறிய குழந்தைகளும்

குழந்தைகளின் திசையறியா பாதங்களை
பின் தொடரும்
கருவுற்ற பூனை
தன் கூர் நகங்களை தவறாது
தெருவின் பூட்டிய வீடுகளின் முன்
தவற விட்டுச் செல்கிறது.
நிறமற்ற பூனைகளின்
துண்டிக்கப்பட்ட பிரேதங்கள்
இறந்த சுவர்களின் திசையெங்கும்
அலைந்து திரிகிறது.
பூட்டிய தாழ்ப்பாளின் எலும்புகளில்
நகர அடிமைகளின் தடயங்களை
உருவமற்ற நிழல்கள் பல
வேவு பார்ப்பது மிக இயல்பானதாகிட
பூனை வேட்டை பற்றிய கனவில்
விலா இளைக்க
படுத்துறங்கும் நாய்கள்
பாதசாரிகளின் கவனத்திற்கு அவசியமற்ற ஒன்றாகிறது.
பாதசாரிகளும் , நாய்களும்
ஒன்றா அல்லது வேறுவேறா என்ற
குழப்பங்களில் திரவமற்று ஆவியாகின்றன
பயம் கொண்ட பூனைகளின்
மச்சள் விழிகள் .....
பால் நிரம்பிய முலைகளின் கனவுகளில்
நீந்தித்திரியும் குழந்தைகளின் கொலுசு பாதங்கள்
காற்றில் தூவிச் செல்கிறது
பூனைகளின் பசி ஒலிகளை ...
யாருக்கும் தெரியாது ப்ராய்லர் கோழியின்
மஞ்சள் விரல்களை
வாயில் கவ்விய கருங்காக்கை ஒன்று
இப்பொழுது
அடுத்த தெருவின் மின் கம்பிக்கு
பறந்து செல்கிறது
எந்த அடிமைகளுக்கும் தெரியாமல் .....

No comments:

Post a Comment