Tuesday, April 6, 2010

யாழி நிலம்

யாளி கூறும் புனைகதைகளால்
கை நழுவி
இமை மூடும் கணத்திற்குள்
உடைந்துவிடுகிறது என் வனம்.

பதறிய உணர்வில்
சிதறிய வனத்தை இரு கைகளாலும்
அள்ளி ஒன்று சேர்க்க
நீர் மருதுவின் தோல் சுருக்கங்கள்
வலது கையைக் கிழித்து
பெருந் தாகத்துடன் பருகுகிறது
அதனுயிர் குளிர எனதுயிரை.

கல்லோடையில் உருளும் பாறைகளில்
மாட்டிக்கொண்ட யாளிகள்
தனது கூர் நகங்களை தொலைத்திட
அவைகளை மெல்ல வருடி
வளர்ப்பு மிருகமென
எனது மடியில் வெப்பமூட்ட
தன் சிறகு விரித்து சட்டென பறந்து செல்கிறது

மறதிக்காரனின் தேடல் பாதைகள்

துமிகளுக்குள் திரிந்திடும்
கனவின் பேய்கள் பிடுங்கியோடுகிறது
ஞாபகத்தின் நாடு நிசிக்குள்
என் ஆழ் துக்கங்களை ...

காமம் நிரம்பிடும்
கனவின் வியர்வைகளில்
உருக்கொள்கிறது
பயம் மற்றும் பயங்கள்....


இரவின் பாதைகளில்
சிதறிய எலும்புகளில்
கசியும் மாதக்குருதியால்
மறத்தல் பற்றிய குறிப்புகளைத் தேடியலைகிறேன்
மயானத்தின் மௌன ஜாமங்களுக்குள்...

முதல் ஜாமம்
*கசிந்திடும் பேனாவின் நீல ரேகைகளில்
* தொலைந்த துணைக் காலின் சுட்டு விரலில்
* கனவுகளழித்த ரப்பரில் படர்ந்த பிழைகளில்


நாடு ஜாமம்
* மூட்டைகள் பதுங்கும் உதிர்ந்த சுவரின் இடுக்குகளில்
* நசுக்கப்பட்ட பேண்களின் விரல் நகங்களில்
* பகலைக் கூறுபோடும் ஜன்னல் கம்பிகளின் இரவுகளில்

கடை ஜாமம்
* கிழிக்கப்பட்ட துணிகளில்
* இரண்டாம் நாள் குருதிக் கவளங்களில்

தோழி!
ஒவ்வொரு புணர்வின் உச்சத்திலும்
காணாமல் போய் விடுகிறது
நமது ஓர்மை

காமத்தின் தேடல்களில்
நாம்
கனவுகொள் பேய்களாகிறோம்.
ஆம்
காமம்கொள் பேய்களாகிறோம் .

Friday, April 2, 2010

வடிவத்திற்குள் மறைபவர்கள்

அங்கங்களை நட்சத்திரமாக்கி
உறைந்து கிடக்கும் எனதருகில்
குருதி மிதக்கிறது
புனித யோனியாய்...

சுழியின் விளிம்புகளில்
சயனம் கலைந்த கனசதுரமாய்
யார் யாரோ தூக்கி ஓடுகின்றனர்
எனை .....
நானும் ஓடுகின்றேன்
அவர்களுடன்...

கனசதுரம் கனசெவ்வகமாய் மாற
யார் யாரோ துரத்துகிறார்கள்
எனை ...
நானும் துரத்துகிறேன்
அவர்களுடன் ...


மரண பயம் கருதி
கவனமாக ஒளிகிறேன்
எனக்குள்.
எனக்குள் ஏற்கனவே மறைந்திருக்கும்
எனைப்போலோருவனை
என்னிருத்தல் காரணமாய்
யாரோ ஒருவனால் எனக்கு சுடவிருந்த
பெயரின் முதல் எழுத்தில்
சில சொற்கள் எடுத்து
அவனின் மார்பினில் அழுத்துகிறேன்
கேவலின் ரணமொழுக துடித்திடும் என்னில்
உயிரை கையில் பிடித்து
குருதி சிந்த விழுகிறான்
கோள வடிவ சூத்திரத்திற்க்குள்....


காமம் -இயலாமை -துயரம்
ஆகியவற்றின் நீண்ட விவாதங்களிடையே
அழுக்கடைந்த யோனிக்குள்
கருவறைக் குழந்தையாய்
மிதந்து கொண்டிருக்கிறேன் நட்சத்திரமாக ...


பசிக்கு
சில
குருதிக் கவளங்களுடன்.......